leader-profile-image

புத்தர்

  • உள்ளொளி கொண்டு உலகை மாற்ற உதித்த மகத்தான புரட்சியாளர்! கனல்விழிகளில் கருணைப்பார்வை சூடி, பயணப்பட்ட நிலங்களையெல்லாம் பண்படுத்தியவர்!
  • அரிதாகவே மனிதகுலம் பேரறத்தான்களைக் கண்டுள்ளது. அதில், தலையாயவர் புத்தர்! அடுத்தவர், தச்சனின் மகனென மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்ட இயேசு! அதற்கடுத்தவர், துறவியென அரையாடி கட்டி அரசியல் புரட்சி செய்த மகாத்மா காந்தி!
  • நாம் காண்பது ஒற்றைப்புத்தர். ஆனால், அதற்குள் மூன்று புத்தர்கள் இருக்கிறார்கள். முதலாவது, வழிபாட்டுப் புத்தர், இரண்டாவது தத்துவப் புத்தர், மூன்றாவது, வரலாற்றுப் புத்தர். வழிபாட்டுப் புத்தர் என்பது வேறு யாருமல்ல. நாம் கடவுளாக வணங்குபவர். தத்துவப் புத்தர் கொஞ்சம் உக்கிரமானவர். அவரது தத்துவங்களே அந்தப் புத்தர். வரலாற்றுப் புத்தர், சாதாரண சாக்கிய குல இளவரசன்! இதில் எந்த புத்தர் உங்களுக்கு உவப்போ, அந்தப் புத்தரை ஏற்றுக்கொள்ளலாம்.
  • புத்தர், இங்கு மாற்றியவை நிறைய. குளத்தில் கல்லென, வனத்தில் நெருப்பென, மரத்தில் காற்றென விழுந்தவர், அவர். அவரது வருகைக்குப் பிறகு எல்லாமே மொத்தமாக மாறியது. முதலில் கடவுள் எனும் கருதுகோளையே அவர் உடைத்தெறிந்தார். அந்த இடத்தில், அன்பு, கருணை, அறம் என நல்சிந்தனைகளை கொண்டுவந்து வைத்தார். எல்லோரும் இதற்கு ஒரு பெயர் கொடுங்கள் என்று கேட்டபோது, மெல்லிதழ் மெல்ல அசைய சிரித்து, ‘சரி… ஒற்றைப்பெயர் தான் தேவையென்றால், தம்மம் எனுங்கள்…’ என்றார்.
  • தம்மம்… இதற்கு இணையான இன்னொரு தத்துவம் இவ்வுலகில் இல்லை. அறமென நாம் நினைக்கும் அத்தனையும் அந்த ஒற்றைச்சொல்லில் அடக்கம். உண்மையில், தம்மத்துவத்துக்கும் இந்துத்துவத்துக்கும் நடந்த யுத்தத்தையே இந்தியாவின் இரண்டாயிரமாண்டு வரலாறென நாம் இன்று படிக்கிறோம்!
  • முற்றிலும் வேத நிராகரிப்பாளர், புத்தர். அவரது அத்தனை ஆற்றலும் வேதத்தை எதிர்த்ததன் மூலமே ஒன்றுதிரண்டது. முக்கியமாக, வேதங்களை அவர் வெறுமனே ஆன்மீகப் பிரதியென மட்டும் கருதி எதிர்க்கவில்லை. அரசியல் பிரதியென கருதியும் எதிர்த்தார். வேதம் முன்வைத்த, பாவம், புண்ணியம் என்ற இடங்களில் எல்லாம் அவர் நல்ல செயல், தீய செயல் என்ற பதங்களை முன்வைத்தார். என்ன நினைக்கிறீர்கள்? நாம் நினைப்பதற்கு எல்லாம் அப்பாற்பட்ட மாபெரும் அரசியலாளர், புத்தர்!
  • ஏற்கனவே சொன்னது போல, புத்தர் அரசவாரிசு. அவரது சாக்கிய குலம் அன்றைய பாரதவர்ஷத்தின் மிகமுக்கிய அரசகுலம். புத்தர் நினைத்திருந்தால் சாக்கிய குல அரசனாகவே வாழ்வை வாழ்ந்திருக்கலாம். ஆனால், புத்தர் ஆயுதங்களை வெறுத்தார். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் துன்புறுத்துவதை அவரால் எந்தவிதத்திலும் ஏற்க முடியவில்லை. ‘வெட்டி வீழ்த்துவது வீரமா அல்லது கட்டி அரவணைப்பது வீரமா’ என்ற விவாதம் புத்தரை காற்றுமானியை காற்றென ஓயாமல் அலைக்கழித்தது. கடைசியில், ‘கட்டி அரவணைப்பதே வீரம்’ என்ற இடத்திற்கு அவர் வந்து சேர்ந்தார். அப்புறம் அவர் அரைநொடி கூட தாமதிக்கவில்லை. படி தாண்டினார். பாதம் தேய நடந்தார். கயையின் அரசமரத்தின் அடியில் ‘அன்பே அனைத்தையும் ஆளும் சொல்’ என்ற ஞானத்தை அடைந்து போதிசத்துவன் ஆனார்.
  • புத்தரை புரட்சியாளர் எனலாம். சீர்திருத்தவாதி எனலாம். எல்லாவற்றுக்கும் மேலே கடவுள் என்றும் சொல்லலாம். ஆனால், அவர் வெறும் ததாகதர் மட்டுமே! அதாவது, ஒரு வழிப்போக்கன். இவ்வழியே வந்தவர், இவ்வழியே போனவர்!
  • வணங்கினால் புத்தரை உணர முடியும். ஆனால், வாசித்தால் மட்டுமே புத்தரை அறியமுடியும். அப்படி அறிந்தபின், ’புத்தம் சரணம் கச்சாமி’ என்பது எவருக்கும் வெறும் வார்த்தையாக தோன்றாது. சமத்துவத்துக்காக எழுந்த ஒரு பேரொளியென்றே தோன்றும்!